திருச்சி மாநகரில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம்

கிராமப்புறங்களைப்போல திருச்சி மாநகரில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-08 19:39 GMT
திருச்சி, மார்ச்.9-
கிராமப்புறங்களைப்போல திருச்சி மாநகரில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்
கிராமப்புறங்களில்100நாள்வேலைஉறுதிதிட்டத்தைப்போல, நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் டாக்டர்.சி. ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரையின் அடிப்படையில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை, முன்னோடி திட்டமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
அதன்படி, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொடக்க விழா நேற்று காலை திருச்சி குழுமணி ரோட்டில் உள்ள 8-வது வார்டில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பேசினார். மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ரூ.100 கோடி ஒதுக்கீடு
திருச்சி மாநகராட்சியில் உள்ள கோ-அபிஷேகபுரம் கோட்ட பகுதிவாழ் 67,762 குடியிருப்புகளில், 62,300 குடியிருப்புகளை ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான 5,630 நபர்கள் விருப்பம் தெரிவித்ததன் பேரில், அவர்களுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் என்ற திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலமும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகள், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் இவ்வாண்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 50 சதவீதம் குறையாமல் பெண் பணியாளர்களை அமர்த்தி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் இருபாலருக்கும் சம அளவில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நபருக்கு ரூ.363 ஊதியம்
இத்திட்டத்தின் கீழ்,  ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 வீதம் வழங்கும் வகையிலும், மனித ஆற்றலுக்கு ரூ.88.39 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்