முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
வளர்பிறை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் மாசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி பாலசுப்பிரமணியருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்பட 18 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் மலையை சுற்றி வந்து முருகனை வழிபட்டனர். இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவில், வெண்ணைமலை முருகன் கோவில்களில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புன்னம்சத்திரம் அருகே உள்ள பாலமலை பாலசுப்பிரமணியருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.