மகன் தாக்கியதால் மனவேதனையில் தந்தை தற்கொலை
மகன் தாக்கியதால் மனவேதனையில் தந்தை தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
ஆர்.எஸ்.மங்கலம்
மகன் தாக்கியதால் மனவேதனையில் தந்தை தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தந்தை மீது தாக்குதல்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கூடலூர் ஊராட்சி நத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 62). இவருடைய மகன் கோட்டைச்சாமி (28). இவர் நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.
தற்போது கோட்டைச்சாமி ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் ராமு, தனது உறவினர் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கோட்டைச்சாமியிடம் கேட்டுள்ளார். இதற்கு கோட்டைச்சாமி, நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோட்டைச்சாமி ஆத்திரத்தில் தனது தந்தையை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதுகுறித்து ராமு திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்தபோது இருவரும் சமாதானமாக செல்வதாக கூறியுள்ளனர். இருப்பினும் வீட்டிற்கு வந்த ராமு, மகன் தன்னை தாக்கியதை நினைத்து மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வேட்டியால் மின்விசிறியில் தூக்குப்போட்டு ராமு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் கைது
இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டைச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் தாக்கியதால் மனவேதனை அடைந்த தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.