பாலின சமத்துவம் குறித்து மினி மாரத்தான் ஓட்டம்
மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
பாலின சமத்துவம் குறித்து புதுக்கோட்டையில் மினி மாரத்தான் ஓட்டம் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரை வலம் வந்தனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மினி மாரத்தான் ஓட்டமானது, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை வழியாக 2 கி.மீ. தூரம் சென்று மறுபடியும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.