நாகையில், வாஸ்கோடகாமா வாராந்திர ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட வாஸ்கோடகாமா வாராந்திர ரெயிலுக்கு நாகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-03-08 18:06 GMT
நாகப்பட்டினம்:
2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட வாஸ்கோடகாமா வாராந்திர ரெயிலுக்கு நாகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனா 
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. அதன்படி வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாஸ்கோடகாமா வாராந்திர ரெயில் மீண்டும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
வாஸ்கோடகாமா வாராந்திர ரெயில்
 இதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரெயில் சேவை தொடக்கப்பட்டது. இதில் காலை 9 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறபட்ட வாராந்திர ரெயில் நேற்று காலை 11 மணிக்கு நாகை ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அப்போது வாஸ்கோடகாமா ரெயிலுக்கு இந்திய வர்த்தக தொழில் குழுமம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் துணை டிரைவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்த்குமார், நாகை ஒன்றியக்குழு உறுப்பினர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும்
கொரோனா காரணமாக காரைக்கால், வேளாங்கண்ணிக்கு சென்ற ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டுள்ள அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
தற்போது இயக்கப்படும் பயணிகள் ரெயில்களில் விரைவு ரெயிலுக்கான கட்டணம் வசூல் செய்யப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்