உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நாகை மாணவ-மாணவிகள்
சொந்த ஊருக்கு திரும்பிய நாகை மாணவ-மாணவிகள், உக்ரைனில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்ததாக கூறினர்.
வாய்மேடு:
சொந்த ஊருக்கு திரும்பிய நாகை மாணவ-மாணவிகள், உக்ரைனில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்ததாக கூறினர்.
மருத்துவ மாணவர்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் மகன் அகத்தியன் (வயது18). இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில் அகத்தியன் சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அகத்தியனின் பெற்றோர் அவரை மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை
மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மாணவர் அகத்தியன் பஞ்சநதிக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார்.
அவரை வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரதங்கம், தேவி செந்தில், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இலக்குவன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும் கிராம மக்களும் மாணவரை சந்தித்தனர்.
பின்னர் மாணவர் அகத்தியன் கூறியதாவது:-
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
உக்ரைன், ரஷியா இடையே போர் மூண்டதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து மாணவர்களை வெளியேற உத்தரவிடப்பட்டது.
இதை தொடர்ந்து நானும் மற்ற மாணவர்களும் உக்ரைனில் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து காட்டின் வழியே நடந்தே சென்று கீவ் ரெயில் நிலையத்தை அடைந்தோம்.
அங்கிருந்து ரெயில் புறப்படும் வரை உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்தது. அங்கிருந்து ஒருவழியாக சுலோவோக்கியா விமான நிலையத்துக்கு சென்று அடைந்தோம்.
மருத்துவர் கனவு
பின்னர் அங்கிருந்து இந்திய அரசின் விமானம் மூலம் டெல்லி வந்தேன். என்னை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது எனது மருத்துவர் கனவு கேள்வி குறியாக உள்ளது. எனவே இந்தியாவில் மருத்துவம் படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவிகளுக்கு ஆறுதல் கூறிய கலெக்டர்
இதேபோல உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மருத்துவ மாணவி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ் மகள் ஜனனியை நேற்று அவரது வீட்டில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அந்த மாணவி கூறுகையில், உக்ரைன் நாட்டில் இருந்து மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளேன். அங்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்தது. உக்ரைனில் 5 ஆண்டுகள் மருத்துவம் படித்து முடித்துள்ளேன். மீதி ஒரு ஆண்டு படிக்க வேண்டி உள்ளது. எப்படி படிக்க போகிறேன் என்பது தெரிய வில்லை என்றார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கலெக்டர், வேளாங்கண்ணிக்கு சென்று உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவி லின்சாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.