இலவச வீட்டுமனை கேட்டு அருந்ததியர் சமுதாய மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு

இலவச வீட்டுமனை கேட்டு அருந்ததியர் சமுதாய மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-03-08 17:30 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட அருந்ததியர் முற்போக்கு நலச்சங்க மாவட்ட தலைவர் வெங்கடசாமி, மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி கடந்த, 11 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனுக்கள் பல கொடுத்தும் யாரும் பரிசீலிக்கவில்லை. இதுதொடர்பாக இருமுறை போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. கிருஷ்ணகிரி உதவி கலெக்டரிடம் இருந்து ஒரு கடிதமும், இடம் வழங்குவது தொடர்பாக தாசில்தார் விசாரணை மேற்கொண்டு விவரமளிக்குமாறும் ஒரு கடிதமும் மட்டுமே வந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக நாங்கள் எங்களின் அடிப்படை தேவைகளுக்காக போராடி வருகிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்யும், 200 குடும்பத்தினருக்கு தானம்பட்டி புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை வழங்க கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. அந்த இடத்தில் வீட்டுமனை வழங்க முடியாவிட்டாலும் வேறு இடத்தில் எங்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்