பஸ் முன்பு பாய்ந்து கூலி தொழிலாளி தற்கொலை
கிணத்துக்கடவு அருகே மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் அரசு பஸ் முன்பு பாய்ந்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் அரசு பஸ் முன்பு பாய்ந்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலி தொழிலாளி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 26). இவர் சென்றாம்பாளையம் பிரிவு அருகில் உள்ள மர அறுவை மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். செல்லமுத்து தாமரைக்குளத்தை சேர்ந்த சாந்தி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் செல்லமுத்துவுக்கு மதுகுடிக்கும்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காமல், மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மனைவி பிரிந்து சென்றார்
சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த செல்லமுத்துவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சாந்தி, தனது குழந்தையுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றதால் மனமுடைந்த செல்லமுத்து அதிகளவில் மதுகுடித்துவிட்டு, மனைவி மற்றும் மகளை நினைத்து பிறரிடம் புலம்பி வந்துள்ளார்.
பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்றாம்பாளையம் பிரிவு அருகே கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த செல்லமுத்து திடீரென அந்த வழியாக வந்த அரசு பஸ் முன்பு பாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் செல்லமுத்து பஸ்சின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்லமுத்து வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி, பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.