7 நாட்கள் மரண பீதியில் இருந்தோம்

உக்ரைனில் இருந்து ஹங்கேரி எல்லை வரும் வரை 7 நாட்கள்மரணபீதியில் இருந்தோம் என்று சின்னாளப்பட்டி மாணவர் கூறினார்

Update: 2022-03-08 15:57 GMT
சின்னாளப்பட்டி:
மரணபீதி
சின்னாளப்பட்டி கருணாநிதி காலனியை சேர்ந்த ராமநாதன்-நாகம்மள் தம்பதி மகன் அண்ணாமலை (17). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜெப்ரோசியா ஸ்டேட் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் டாக்டருக்கு படித்து வந்தார். இவர் ரஷியா போர் தொடு்த்துள்ள சூழலில் நேற்று மாலை உக்ரைனில் இருந்து சின்னாளப்பட்டிக்கு திரும்பி வந்தார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது:-
 தமிழகத்தை சேர்ந்த 35 மாணவர்கள் என்னோடு வந்தனர். போர் தொடங்கிய நாளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் போர் அபாய சங்கு ஊதுவது எங்களுக்கு கேட்கும். அப்போதெல்லாம் மரண பிடியில் இருப்பதாகவே நாங்கள் உணர்ந்தோம். உடனடியாக ஓடிச்சென்று பல்கலைக்கழக பாதாள அறையில் பதுங்கி கொள்வோம். உக்ரைன் நாட்டில் இருந்து ஹங்கேரி நாட்டின் எல்லைக்கு வரும் வரை 7 நாட்கள் மரண பீதியிலேயே இருந்தோம். பல்கலைக்கழகம் எங்களுக்கு முழுமையாக உதவியது.
ரெயில் நிலையங்கள்
உக்ரைன்-ஹங்கேரி எல்லையில் 14 மணி நேரம் காத்திருந்தோம். எல்லா ரெயில் நிலையங்களிலும் ரெயிலில் ஏறுவதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். ஹங்கேரி எல்லையில் இந்தியா செல்வதற்கான அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை ரெயில் மூலம் அந்த நாட்டின் தலைநகரான குடாபெஸ்ட்டில் உள்ள விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 

அங்கிருந்து விமானம் மூலம் 10 மணி நேர பயணத்திற்கு பின் டெல்லி வந்தோம். பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஒரு நாள் தங்கி விட்டு விமானம் மூலம் சென்னை வந்தோம். அங்கிருந்து கார் மூலம் சின்னாளப்பட்டி வந்தேன். ஹங்கேரி முதல் டெல்லி மற்றும் வீடு வந்து சேரும் வரை அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டது. இதுபோல் எங்களது மருத்துவபடிப்பு இந்தியாவில் தொடர அரசு உதவ வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

மேலும் செய்திகள்