ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.வை சேர்ந்தவர் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யாததால் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-08 14:13 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. தலைமை தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி அறிவித்தது. தி.மு.க.வை சேர்ந்த சாந்தி சதீஷ்குமார் போட்டியாக வேட்பு மனு தாக்கல் செய்து தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் செல்வமேரி அருள்ராஜ் 4 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தி.மு.க. தலைமை அறிவித்த கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியாக வேட்பு மனு அளித்து வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், மேலும் தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இருப்பினும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாந்தி சதீஷ்குமார் இதுவரை ராஜினாமா செய்யவில்லை.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தும் போட்டியாக நின்று வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவரான தி.மு.க. வை சேர்ந்த சாந்தி சதீஷ்குமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யாததை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜ் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்