மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

Update: 2022-03-08 13:56 GMT
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் வழியாக சென்னை சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தலில், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றி இருந்தது. மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், நகர செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.ஏ.எஸ்வந்த்ராவ் மற்றும் கவுன்சிலர்கள், அ.தி.மு.க.வினர் கிழக்கு கடற்கரையில் திரண்டு வந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று, ஒவ்வொருவராக அவருக்கு பூங்கொத்து, சால்வைகள் வழங்கி அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

அப்போது அவர் மாமல்லபுரம் பேரூராட்சியை கைபற்றிய தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். பின்னர் அவர் சென்னை புறப்பட்டு சென்றார். முன்னாள் முதல்-அமைச்சரை வரவேற்க ஏராளமான அ.தி.மு.க.வினர் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு வருகை தந்த அவரை சித்தாமூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் டாக்டர் பிரவீன்குமார் ரோஜா மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தார். இதில் இடைக்கழிநாடு பேரூராட்சி செயலாளர் ஆறுமுகம், மற்றும் சுந்தரவேல், அருண், கோதண்டம், கோபுராஜ், விஜயன், முருகன், சந்தோஷ், கமல், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் பெரியகளக்காடி திருமால் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்