தொடர் திருட்டு சம்பவங்கள்: மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் சிக்கினார்
தூத்துக்குடியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மோட்டார் சைக்கிள் பறிமுதல்
தூத்துக்குடி அருகே உள்ள விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் தலைமையிலான போலீசார் தருவைகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் நந்தகுமார் (வயது 21) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. அவர் பட்டினமருதூரை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு சென்று உள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைது
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் (50) என்பவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும், தருவைகுளம் டாஸ்மாக் கடையில் ஓட்டை பிரித்து 51 மதுபாட்டில்களை திருடியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தருவைகுளம் போலீசார் நந்தகுமாரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.