முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் இன்றைய நீர்மட்டம் 127 அடியாகும். அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து இல்லை. இந்நிலையில் இன்று காலை முதல் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.