சாலையில் சுற்றித்திரிந்த 176 மாடுகள்: உரிமையாளர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 மாடுகளும், மணலியில் 8, மாதவரத்தில் 8, தண்டையார்பேட்டையில் 12, ராயபுரத்தில் 10, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 15, அம்பத்தூரில் 12, அண்ணாநகரில் 24, தேனாம்பேட்டையில் 22, கோடம்பாக்கத்தில் 22, வளசரவாக்கத்தில் 7, ஆலந்தூரில் 7, அடையாறில் 2, பெருங்குடியில் 7, சோழிங்கநல்லூரில் 15 மாடுகளும் என மொத்தம் 176 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.