வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க காலதாமதம்; கர்நாடக அரசு மீது சபாநாயகர் அதிருப்தி
வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காலதாமதம் ஆவதாக கர்நாடக அரசு மீது சபாநாயகர் காகேரி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பெங்களூரு:
வீடுகள் ஒதுக்கப்படவில்லை
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் கேள்வி ஒன்றுக்கு வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பதிலளித்தார். அப்போது சபாநாயகர் காகேரி குறுக்கிட்டு பேசும்போது கூறியதாவது:-
பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவர்களுக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடந்த 2018-19-ம் ஆண்டு மீனவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.
தங்களுக்கு வீடு கிடைத்துவிடும் என்று ஏழை மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்ற சம்பந்தப்பட்ட மந்திரி மற்றும் அதிகாரிகள் உரிய முறையில் பணியாற்ற வேண்டும். வீட்டு வசதி திட்டங்களை அடிக்கடி தள்ளிவைத்து நிதி ஒதுக்காமல் இருப்பது சரியல்ல.
இவ்வாறு காகேரி கூறினார்.
பயனாளிகள் தேர்வு
அப்போது பேசிய மந்திரி சோமண்ணா, "வீடுகளை பெற பயனாளிகளை தேர்வு செய்யும் அதிகாரம் வீட்டு வசதித்துறைக்கு இல்லை. அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களின் தலைமையில் செயல்படும் குழுக்களுக்கு தான் உள்ளது.
அந்த குழுக்கள் தான் பயனாளிகளை தேர்வு செய்து அதன் பட்டியலை வீட்டு வசதித்துறைக்கு அனுப்ப வேண்டும். அதனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பயனாளிகளின் பட்டியலை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று இந்த சபை மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
வீட்டு வசதி திட்டங்கள்
அவ்வாறு பயனாளிகளின் பட்டியலை அனுப்பினால், வீடுகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளிகள் பட்டியல் வந்ததும் வீடுகளை ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் நமது அதிகாரிகள் அதில் அலட்சியமாக செயல்படுகிறார்கள். அதனால் வீட்டு வசதி திட்டங்கள் தாமதமாகின்றன. நாங்கள் ஏழைகளுக்கு வீடுகளை கட்டி கொடுக்க திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஆனால் சிலர் செய்யும் தவறுகளால் வீடுகளை ஒதுக்குவதில் காலதாமதம் ஆகிறது" என்றார்.