அனுமதியின்றி தயாரித்த ரூ.4 லட்சம் சரவெடிகள் பறிமுதல்

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் அனுமதியின்றி தயாரித்த ரூ.4 லட்சம் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-07 19:48 GMT
தாயில்பட்டி, 
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமீறல்களை தடுக்கும் வகையில் சிறப்பு ஆய்வுக் குழு  நியமனம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை பகுதியில் அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். 
செவல்பட்டி கிராமத்தில் சங்கரன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையினை சிறப்பு ஆய்வுக்குழுவை சேர்ந்த வெம்பக்கோட்டை தனி தாசில்தார் ரங்கசாமி, தலைமையில், சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் குமரேசன், விருதுநகர் தீயணைப்பு தடுப்புக் குழு நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு  மேற்கொண்டனர். 
அப்போது நீதிமன்றம் தடைசெய்த சரவெடி பட்டாசுகள் அனுமதியின்றி உற்பத்தி செய்ததும், 246 எண்ணிக்கை கொண்ட பெட்டிகளில் அனுமதியின்றி இருப்பு வைத்திருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர்.
 சரவெடி பட்டாசுகள் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களை அதிகளவில் அனுமதியின்றி மண் தரையில் உலரவைக்கப்பட்டு இருந்ததும், கந்தகம் இருப்பு பதிவேடு தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படாத நிலையில், கந்தகம் இருப்பு அறையில்500 கிலோ கந்தகம் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் சரவெடிகள் தயாரிக்கும் பணியில் 26 தொழிலாளர்கள் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. 
இதையடுத்து அவர்கள் அனுமதியின்றி தயாரித்து வைத்த சரவெடிகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள்  வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. 
இதுகுறித்து  வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன், ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்