கண்களை கட்டிக்கொண்டு தேங்காய்களை உடைத்து சாதனை படைத்த பள்ளி மாணவி
கண்களை கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு 2 நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள நாராயண சாமி செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் நளினி தலைமையில் நடந்தது.
பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி சுருதியின் தங்கை காஞ்சனா தரையில் 2 கைகளை விரித்தபடி படுத்துக் கொள்கிறார். அவரை சுற்றி 106 தேங்காய்கள் பரப்பி வைக்கப்பட்டன.
மாணவி சுருதி தனது 2 கண்களையும் கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு 2 நிமிடத்தில் 106 தேங்காய்களை சுத்தியலால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை உலக சாதனை ஆவண நிறுவனமும் வீடியோ படக்காட்சிகளும் படமாக்கப்பட்டது. மேலும் மாணவியின் சாதனையால் முனுகப்பட்டு கிராமமும் பெருமையடைகிறது.
சாதனை படைத்த மாணவியின் பெற்றோரை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவரும் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவருமான வேலு, ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிப்பிரியா விஜயகுமார், கல்வி குழு, பெற்றோர் ஆசிரியர் குழு மற்றும் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். முன்னதாக தொடக்க பள்ளி தலைமையாசிரியர் தியாகராஜன் வரவேற்றுப் பேசினார். முதுகலை தமிழாசிரியர் வேணுகோபால் நன்றி கூறினார்.