ஏரியில் மீன் பிடிக்க சென்ற கட்டிட மேஸ்திரி நீரில் முழ்கி பலி
ஏரியில் மீன் பிடிக்க சென்ற கட்டிட மேஸ்திரி நீரில் முழ்கி பலியானார்.
காவேரிப்பாக்கம்
வாலாஜாவை அடுத்த கரடிகுப்பம் திரவுபதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காவேரிப்பாக்கம் ஏரியில் தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உள்கரை பகுதியில் நீண்டநேரமாக முயன்றும் மீ்ன் சிக்காததால் ஏரி தண்ணீருக்குள் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஏரியில் உள்ள பெரிய பள்ளத்துக்குள் சிக்கி கொண்டதில் நீரில் மூழ்கி தத்தளித்தார். இவருடன் மீன் பிடித்து கொண்டு இருந்தவர் பார்த்தபோது முருகனை காணாததால் அது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதாள கொளுசு மூலம் தேடியதில் அரைமணி நேர போராட்டத்துக்கு பின் அவரை பிணமாக மீட்டனர்.
இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனின் உடலை பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.