எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சங்கீதா வெற்றி-முன்னாள் அமைச்சர் தங்கமணி வாழ்த்து

எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சங்கீதா வெற்றி பெற்றார்.

Update: 2022-03-07 17:49 GMT
எருமப்பட்டி:
எருமப்பட்டி ஒன்றியத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 5 வார்டுகளிலும், அ.தி.மு.க. 9 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த வரதராஜன் ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 2 முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த சங்கீதா தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். மற்ற உறுப்பினர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சங்கீதா வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி கோபிநாத் தெரிவித்தார். ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கீதாவுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சங்கீதா, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மேலும் செய்திகள்