பண்ணை குட்டைகளை நீர்வளம் பெருகும் வகையில் அமைக்க வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் அறிவுறுத்தல்
பண்ணை குட்டைகளை நீர்வளம் பெருகும் வகையில், இடத்தினை தேர்வு செய்து அமைக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் அறிவுறுத்தினார்.
நாமக்கல்:
ஆய்வுக்கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த விரைந்து பணியாற்ற வேண்டும். வேளாண்மை துறையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வேளாண் வட்டாரத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியினை தேர்வு செய்து, மண் பரிசோதனை செய்ய வேண்டும்.
மண்பரிசோதனை செய்து விவசாயம் மேற்கொண்டதால், விவசாயி அடைந்த பலன்கள் குறித்து அவரது விவசாய நிலத்திற்கு பிற விவசாயிகளை அழைத்து வந்து காண்பிக்க வேண்டும். இதன்மூலம் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து பிறரையும் அறிந்து கொள்ள செய்ய வேண்டும்.
பண்ணை குட்டைகள்
அதேபோன்று கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் அந்தந்த மண் வளத்திற்கேற்ப வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பண்ணை குட்டைகளை நீர் வளம் பெருகிடும் வகையில் இடத்தினை தேர்வு செய்து அமைக்க வேண்டும்.
வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையினர் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சி திட்ட பணிகளை, குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனை கட்டிடம்
இதனைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பின்னர், அவர் நாமக்கல் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற படிப்பகம் மற்றும் நூலக கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் காதப்பள்ளியில் 75 வயது மூதாட்டி வீரம்மாளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகத்தினை வழங்கினார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்முறைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.