ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டிய போலி அதிகாரி. பொதுமக்கள்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டிய நபரை பொதுமக்கள்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-03-07 17:33 GMT
அணைக்கட்டு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டிய நபரை பொதுமக்கள்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

டிப்டாப் ஆசாமி

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பஸ் நிறுத்தம் அருகே பாபுபாய் என்பவர் கடந்த ஓட்டல் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு டிப்டாப் உடையுடன் ஒருவர் ஓட்டலுக்குள் நுழைந்தார்.

அந்த நபர் அங்கு பணிபுரிந்து இருந்த பெண்ணிடம் இரவு 10.45 வரை ஏன் கடை நடத்தி வருகின்றீர்கள்.தரை முழுவதும் அழுக்குப் படிந்த நிலையை டைல்ஸ் கற்களை ஏன் சுத்தம் செய்யவில்லை என் கேட்டு உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியுள்ளார். 

உடனே அந்த பெண் ஊழியர் ஓட்டல் உரிமையாளர் பாபுபாயிடம் கூறினார் அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் டிப்டாப் நபரிடம் நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்.

வாக்குவாதம்

அதற்கு அந்த நபர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்றும் வேலூரில் பணிபுரிந்து வருவதாகவும் கூறி உள்ளார். உடனே ஓட்டல் உரிமையாளர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய். எனக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை தெரியும், நேற்று பகல் 12 மணிக்கு இங்கு வந்து சென்றார் என்று கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் உங்களை நான் என்ன செய்கிறேன் பார் என்று கூறிவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டினார்.

ஓட்டல் உரிமையாளருக்கும் அந்த டிப்டாப் ஆசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் டிப்டாப் மனிதரை கையும் களவுமாக பிடித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
அப்போது பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் அவரிடம் விசாரணை செய்தனர் விசாரணையில் அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி இல்லை என தெரியவந்தது. அப்போது ஓட்டல் உரிமையாளரை போலீஸ் நிலையத்தில் வைத்தே தாக்க முயன்றுள்ளார்.

விசாரணை

இது குறித்து ஓட்டல் உரிமையாளர் பாபுபாய் பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட அந்தநபரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

இதனிடையே வேலூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகொண்டா ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் மனு அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட கலெக்டர் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்