கல்வராயன்மலையில் சேதமான தார் சாலை சீரமைப்பு

கல்வராயன்மலையில் சேதமான தார் சாலை சீரைமப்பு பணி நடந்தது.

Update: 2022-03-07 16:41 GMT

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளது. இங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளும் படகு சவாரி செய்வதற்கு படகு குளமும் உள்ளது.

இந்நிலையில் மலை கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் வந்து செல்ல சாலை வசதி சரியானதாக இல்லை. அதாவது, கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை முதல் மலை அடிவாரப் பகுதியான கீழ் பரிகம் வரை சாலைகள் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. விபத்துகளும் அடிக்கடி நேர்ந்து வந்தது. இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இதை தொடர்ந்து, தற்போது சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில்  வாகன ஓட்டிகளுக்கு வளைவுகள் இருப்பதை தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை உள்ளிட்டவைகளும் வைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் மணிமொழி, உதவி பொறியாளர் தனபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்