உறவினர்கள் சாலை மறியல்

உறவினர்கள் சாலை மறியல்

Update: 2022-03-07 16:13 GMT
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 42. இவர் டீக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பரிமளா33. இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளா நர்சாக பணிபுரிந்து வந்தார். 
இந்த நிலையில் நர்ஸ் பரிமளா கடந்த மாதம் 28 ந் தேதி மருத்துவமனையில் நள்ளிரவு பணியில் இருந்த போது மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே மருத்துவமனை நிர்வாகத்தினர் பரிமளாவை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 1ந் தேதி காலை ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பரிமளாவின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அவரது குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
பரிதாப சாவு
பின்னர் 3ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பரிமளாவின் கணவர் மோகன்ராஜ் மற்றும் உறவினர்கள் பரிமளாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தங்களிடம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டனர். 
ஆனால் பிரேத பரிசோதனை செய்து தான் வழங்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல் 
இதற்கிடையில் மேட்டாங்காட்டுவலசு கிராமத்தில் பரிமளா வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள், பரிமளாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தர மறுத்த கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினரை கண்டித்தும், பரிமளா உடலை உடனே வழங்கக்கோரியும், மேட்டாங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பரமத்தி வேலூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பெற்று  உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து நர்சு பரிமளாவின் உடலை பெற்று கொண்டு வந்து மேட்டாங்காட்டுவலசு கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

மேலும் செய்திகள்