தக்காளி விலை கடும் வீழ்ச்சி

கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.6-க்கு விற்பனையானது.

Update: 2022-03-07 16:12 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.6-க்கு விற்பனையானது.

தக்காளி சாகுபடி

கிணத்துக்கடவு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளான சொக்கனூர், கல்லாபுரம், சிங்கையன்புதூர், நெம்பர் 10 முத்தூர், சூலக்கல், கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இங்கு அறுவடை செய்யும் தக்காளியை விவசாயிகள் கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். அவற்றை வாங்க கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள். 

கிலோ ரூ.6-க்கு விற்பனை

கிணத்துக்கடவு மார்க்கெட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.11 வரை விற்பனையானது. இந்த நிலையில் நேற்று கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டது.

வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து விலை சரிந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு விற்பனையானது. விலை குறைந்ததால் தக்காளி சாகுபடி செய்து உள்ள விவசாயிகளுக்கு போதிய அளவுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கவலை அடைந்தனர்.

வரத்து அதிகம்

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, தற்போது ஆந்திரா, கர்நாடகா உள்பட பல இடங்களில் தக்காளி உற்பத்தி அதிகமாக இருக்கிறது.

 அங்கிருந்தும் தமிழகத்துக்கு அதிகளவில் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில வாரங்களாக  கிணத்துக்கடவு மார்க்கெட்டிக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுவதால், தொடர்ந்து விலைவீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. என்று தெரிவித்தனர்.

மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.6-க்கு விற்றாலும், சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது.

விவசாயிகள் கவலை

தக்காளி விலை சரிவு குறித்து விவசாயிகள் கூறியதாவது:-  நாங்கள் சாகுபடி செய்துள்ள தக்காளிகளை பறித்து கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறோம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து தக்காளி விலை சரிந்து வருகிறது. 

நேற்றைய மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.6 வரை மட்டுமே ஏலம் போனது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டும், மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

தக்காளி விலை குறைந்துள்ளதால் தக்காளி பறிப்பவர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் செடியை பராமரிக்க அதிக செலவு ஏற்படுகிறது. இதனால் சில விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் அப்படியே போட்டுள்ளனர். இதனை கால்நடைகள் மேயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்