அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் விடிய, விடிய போராட்டம்

கொடைக்கானல் அருகே விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.

Update: 2022-03-07 16:07 GMT
பெரும்பாறை:
கொடைக்கானல் அருகே உள்ள கடையமலையில் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களது இருசக்கர வாகனங்களை மைதானத்திற்கு வெளியே நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் டிைரவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த கடையமலையை சேர்ந்த தர்மா (வயது 24). கொலுச்சமலையை சேர்ந்த பிரவீன் (18), காந்திபுரத்தை சேர்ந்த யோகேஷ் (15) ஆகியோர் மீது மோதி நின்றது. சரக்கு வேன் டிரைவர் அங்கு இருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த 3 ேபரையும் மீட்டு சிகிச்சைக்காக கே.சி.பட்டியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சரக்கு வேன் டிரைவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து ஆடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் முத்துராமன் மற்றும் தாண்டிக்குடி போலீசார் நேற்று காலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். அப்போது வேன் டிரைவரை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்ைத கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சரக்கு வேன் டிரைவர் கார்த்திக்கை தாண்டிக்குடி போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்