4 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்ததால் 4 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Update: 2022-03-07 15:54 GMT
நாகப்பட்டினம்:
 வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்ததால் 4 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்
 வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதை தொடர்ந்து நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடல் சீற்றமாக காணப்பட்டதால் நாகை மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுவிழுந்தது. இதனால் நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்டிருந்த 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதை தொடர்ந்து 4 நாட்களுக்குப் பிறகு நேற்று நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
முன்னதாக ஆழ்கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் படகுக்கு தேவையான டீசல், ஐஸ்கட்டி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். நாகை கடுவையாற்று முகத்துவாரத்தில் இருந்து விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மீன்பிடிக்க ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.

மேலும் செய்திகள்