பாளையம் பேரூராட்சியில் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்

பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை சுயேச்சை கவுன்சிலர் ராஜினாமா செய்தார்.

Update: 2022-03-07 15:45 GMT
குஜிலியம்பாறை:
பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை சுயேச்சை கவுன்சிலர் ராஜினாமா செய்தார்.
 போட்டியின்றி தேர்வு
திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளில் தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. தலா ஒரு வார்டிலும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
இந்தநிலையில் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. இதில் 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனிசாமி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு துணைத்தலைவர் தேர்தல் நடந்தது.
 ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு
இதற்கிடையே தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு துணைத்தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. இதனால் 4-வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் லதா துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 13-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் கதிரவன், துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 15 வார்டு கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பின்னர் முடிவுகள் எண்ணப்பட்டபோது, சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் வெற்றிபெற்று, துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ராஜினாமா கடிதம்
இந்தநிலையில் பேரூராட்சி துணைத்தலைவர் கதிரவன் நேற்று செயல் அலுவலர் ராஜலட்சுமியை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். பின்னர் அதற்கான கடிதத்தை செயல் அலுவலரிடம் கொடுத்தார்.
பின்னர் கதிரவன் நிருபர்களிடம் கூறுகையில், நான் கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க.வில் நிர்வாகியாக இருந்து வருகிறேன். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தேன். ஆனால் எனக்கு போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதற்கிடையே கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க.வினர் பதவி விலக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனால் தி.மு.க. தலைமைக்கு கட்டுப்பட்டு நான் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்றார்.

மேலும் செய்திகள்