பெரியகுளத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு
பெரியகுளத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சி தலைவராக வெற்றி பெற்ற சுமிதா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், சரவணக்குமார் எம்.எல்.ஏ., நகர பொறுப்பாளர் முரளி, ஆணையாளர் புனிதன் மற்றும் கவுன்சிலர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
பின்னர் நகராட்சி தலைவர் சுமிதா குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சென்றிருந்தனர். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் கோவில் செல்லும் வழியில் பாதையை மறித்து கட்டப்பட்டிருந்த சுவரை இடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நகர்மன்ற தலைவர் உடனடியாக அந்த பாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் பாதையில் கட்டப்பட்டிருந்த சுவர் இடிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.