கோவில் நிலம் ஆக்கிரமிக்க முயற்சி

கோவில் நிலம் ஆக்கிரமிக்க முயற்சி

Update: 2022-03-07 13:17 GMT
ிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் விவரம் வருமாறு
பல்லடம் நகராட்சி கள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் பட்டத்தரசியம்மன் கோவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இந்த கோவிலை சுற்றி 45 சென்ட் அரசு நிலம் உள்ளது. கோவிலில் அமாவாசை பூஜை, பூச்சாட்டு விழா, மார்கழி மாத விழா மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு இந்த நிலத்தை பயன்படுத்தி வந்தோம். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு கோவிலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் கோவிலை சுற்றியுள்ள நிலத்தை சிலர் அளவீடு செய்து வருகிறார்கள். அரசு நிலத்தில் மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றி உள்ளது. இந்தநிலையில் ரங்கசாமி என்பவர் அரசு நிலம் தனக்கு சொந்தம் என்று வருவாய்த்துறையினரை வைத்து எங்களை மிரட்டி வருகிறார். கோவிலை சுற்றியுள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
நிரந்தர நூலகம்
திருப்பூர் மாநகராட்சி 54வது வார்டு வீரபாண்டி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். கிருஷ்ணா நகர் தொடங்கும் இடத்தில், அமராவதி நகர் எல்லை சந்திக்கும் இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தில் பழைய அங்கன்வாடி கட்டிடம் பழுதுடைந்து கிடந்தது. எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் அந்த கட்டிடத்தை சீரமைத்து பகுதி நேர நூலகத்தை ஏற்படுத்தினோம். தினமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து படித்து செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த நூலகத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இடித்து விடுவோம் என்று மிரட்டி வருகிறார்கள். எனவே நிரந்தர நூலகமாக அமைத்துக்கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் மண்ணரை பாரப்பாளையத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் அளித்த மனுவில், ‘பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக நீர்பாசன கடன் திட்டத்தில் இலவச மின் இணைப்பு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019 ம் ஆண்டு கடன் பெற்றேன். ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டும் இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. கடன் வழங்கிவிட்டதால் அதற்கான தொகையை வட்டியுடன் கட்ட வேண்டியுள்ளது. விவசாய மின் இணைப்பு வழங்கி விவசாயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கனரக வாகனங்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அளித்த மனுவில், ‘திருப்பூர் மாநகருக்குள் தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் நுழைவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக அங்கேரிப்பாளையம் பகுதியில் கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்கிறது. தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் நுழைவதை நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 47வது வார்டு குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நாங்கள் 37 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு நிலத்தை அரசு வழங்கியது. நாங்கள் குடியிருக்கும் இடம் கிணறு என்று பத்திரப்பதிவுத்துறையில் உள்ளது. இதனால் எங்கள் நிலத்தை பத்திரப்பதிவு தொடர்பான பணிகளை செய்ய முடியாமல் தவிக்கிறோம். எனவே எங்கள் நிலத்தை கிணறு என்பதை வகைமாற்றம் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்