உக்ரைனில் சிக்கி உள்ள கர்நாடகத்தை சேர்ந்த 200 மாணவர்களை மீட்கும் பணி தீவிரம் - பசவராஜ் பொம்மை தகவல்
உக்ரைனில் சிக்கி உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த 200 மாணவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
மருத்துவ மாணவர்கள்
உக்ரைன் மீது ரஷியா தனது போரை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்களை அனுப்பி மத்திய அரசு மீட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று உக்ரைனில் சிக்கி தவித்த கர்நாடக மாணவர்கள் சிலர் விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தனர். அவர்களை பெற்றோர் உற்சாகமாகவும், கண்ணீர் மல்கவும் வரவேற்றனர்.
பசவராஜ் பொம்மை வரவேற்றார்
அதேபோல் உக்ரைனில் சிக்கி இருந்த மாணவ, மாணவிகள் நேற்று உப்பள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தனர். அந்த மாணவ, மாணவிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்றார். அப்போது அவர் உக்ரைனில் இருந்து கஷ்டப்பட்டு மீண்டு வந்த தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா யரகுப்பி கிராமத்தைச் சேர்ந்த சைத்ரா ஷான்சி என்ற மாணவியிடம் கணிவுடன் நலம் விசாரித்தார்.
பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
உக்ரைனில் சிக்கி உள்ள கன்னடர்களை மீட்டு வருவதற்காக மத்திய வெளியுறுவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன், நான் நிரந்தரமாக தொடர்பில் இருந்து வருகிறேன். அங்கு கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் 200 மாணவர்கள் சிக்கி இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது. குறிப்பாக அவர்கள் கார்கிவ் பகுதியில் பதுங்கு குழிகளில் இருந்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களை அங்கிருந்து மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. மத்திய அரசும், கன்னடர்கள், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
பிரதமரின் சாமர்த்தியம்
உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதில் பிரதமரும், அவரது அலுவலகமும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதனால் இந்தியவர்களை மீட்பது சாத்தியமாகி இருக்கிறது. பிரதமர் மோடியின் சாமர்த்தியம், அவர் உக்ரைனுக்கு அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவு காரணமாக இந்தியவர்களை மீட்டு வருவதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
கன்னடா்களை மீட்டு வருவதற்காக கர்நாடக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை போன்று, உக்ரைனில் உயிர் இழந்த மாணவர் நவீன் உடலையும் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. நவீனின் உடல் அழுகாமல் இருக்க பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம்
சில விதிமுறைகள், போர் தீவிரம் காரணமாக உடலை கொண்டு வர முடியாத நிலை இருக்கிறது. நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உக்ரைனில் உள்ள இந்திய தூதரகமும் முழு முயற்சி எடுத்து வருகிறது.
உக்ரைனில் சிக்கி இருந்த மாணவி சைத்ரா மிகுந்த சிரமத்தை அனுபவித்து தாயகம் திரும்பி இருக்கிறார். அவர் ஒருவார காலம் பதுங்கு குழியில் பதுங்கி இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தார். அங்கு உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து உக்ரைன் எல்லையை கடந்து போலந்துக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவரை இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டு தாயகம் அனுப்பி வைத்துள்ளனர்.
பெற்றோர் மகிழ்ச்சி
அவர் டெல்லிக்கு வந்து, அங்கிருந்து கர்நாடகம் வந்திருக்கிறார். சைத்ரா திரும்பி வந்திருப்பதன் மூலம், அவரது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சைத்ராவுடன் சேர்த்து மொத்தம் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் கஷ்டப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் வந்துவிட்டனர். இன்னும் 2 பேர் உக்ரைன் எல்லையை தாண்டி இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பெங்களூருவை வந்து சேர்ந்த ராமநகரை சேர்ந்த ஆயிஷா என்ற மாணவி விமான நிலையத்தில் வைத்து கூறும்போது, ‘உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வருவது சுலபம் இல்லை. அங்கு இருந்து மீண்டு வருவது மிகவும் சவாலான விஷயம். கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் உயிர் போய் விடும். போர் தொடங்கியதும் பதுங்கு குழியில் தங்கி இருந்து தற்போது உயிர் தப்பி இங்கு வந்து உள்ளேன்’ என்றார்.
20 மணி நேரம் நின்றபடி பயணம்
விஜயாப்புராவை சேர்ந்த ஸ்ரத்தா என்ற மாணவி கூறுகையில், ‘உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தும் என்ற தகவல் தெரிந்ததும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் கடந்த 27-ந் தேதி நான் நாடு திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்தேன். ஆனால் விமான நிலையத்தை ரஷியா தகர்த்ததால் நாடு திரும்ப முடியவில்லை. அதன்பின்னர் பதுங்கு குழியில் தங்கி இருந்தேன்.
கார்கிவில் எனக்கு குடிநீர், உணவு கிடைக்கவில்லை. பணம் கொடுத்து தான் குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டது. தற்போது நாடு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உக்ரைனில் இருந்து போலந்து செல்ல 20 மணி நேரம் ரெயிலில் நின்றபடி பயணித்தேன். ரெயிலில் உக்ரேனியர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’ என்று கூறினார்.
200 பேர் சிக்கி தவிப்பு
கவுரிபித்தனூரை சேர்ந்த கவுதம் என்ற மாணவர் கூறும்போது, ‘உக்ரைனில் இருந்து நான் நாடு திரும்பி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் சரியாக சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது. உக்ரைனில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் தற்போது உணவு பொருட்கள் கிடைப்பது இல்லை. அங்கு சிக்கி உள்ள இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும்’ என்றார்.
இவர்களை தவிர உக்ரைனில் இருந்து திரும்பிய மற்ற மாணவர்களும் தங்கள் அனுபவித்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் உக்ரைனில் கர்நாடக மாணவர்கள் 200 பேர் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.