சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு-மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கைவரிசை

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-03-06 21:51 GMT
சேலம்:
சேலம் அம்மாபேட்டையை அடுத்துள்ள குமரகிரிபேட்டை பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி பாக்கியம் (வயது 70). இவர், நேற்று முன்தினம் குமரகிரி அருகில் உள்ள தனியார் நூற்பாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென மூதாட்டி பாக்கியம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். ஆனால் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நகையை பறித்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் பாக்கியம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்