உக்ரைனில் சிக்கி தவித்த ஊஞ்சலூர் மருத்துவ மாணவர் நாடு திரும்பினார்
உக்ரைனில் சிக்கி தவித்த ஊஞ்சலூர் மருத்துவ மாணவர் நாடு திரும்பினார்
ஊஞ்சலூர்
உக்ரைனில் சிக்கி தவித்த ஊஞ்சலூர் மருத்துவ மாணவர் நாடு திரும்பினார்.
ஊஞ்சலூர் மருத்துவ மாணவர்
ஊஞ்சலூர் அருகே உள்ள கொளத்துப்பாளையம் கிராமம் நாடார் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). விவசாய கூலி தொழிலாளி. அவருடைய மனைவி மோகனா (50). இவர்களுடைய மகன் பொன்னர் பாலாஜி (21). இவர் உக்ரைனில் வெனிஸ்கா என்ற இடத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் அங்குள்ள பொன்னர் பாலாஜி நிலை குறித்து அவரின் பெற்றோர் கவலை கொண்டு இருந்தனர். இந்த நிலையில் பொன்னர் பாலாஜி கடந்த மாதம் 26-ந் தேதி அன்று மாலை 5 மணி அளவில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த பஸ் மூலம் வெனிஸ்காவில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அண்டை நாடான உக்ரைன் நாட்டு எல்லையான ருமேனியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக பொன்னர் பாலாஜி செல்போனில் தனது தந்தையிடம் தெரிவித்தார்.
ருமேனியா வந்தார்
எல்லையில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் ருமேனியாவுக்குள் நுழைய காத்து இருந்தனர். இவர்களை உக்ரைன் படையினர் 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை 30 பேராக ருமேனியாவுக்குள் அனுப்பி வைத்தனர். இவர்களுடன் பொன்னர் பாலாஜி தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் இருந்தார்.
அங்கு 2 நாட்களாக காத்து கிடந்த பொன்னர் பாலாஜி 28-ந் தேதி மாலை ருமேனியா எல்லைக்குள் அனுப்பப்பட்டார். அங்கிருந்து விமான நிலையம் செல்வதற்காக 4 நாட்களாக காத்திருந்தார். பின்னர் கடந்த 4-ந் தேதி அங்கிருந்து விமான நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.
ஊா் திரும்பினார்
அதைத்தொடர்ந்து அங்கிருந்து இந்திய அரசு அனுப்பிய விமானத்தில் ஏறி நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தார். அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த விமானத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு கோவைக்கு வந்து சேர்ந்தார். அங்கு காத்திருந்த பொன்னர் பாலாஜியின் தந்தை அண்ணாதுரை அவரை வரவேற்றார். பின்னர் கார் மூலம் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
இதுகுறித்து ெபான்னர் பாலாஜி கூறும்போது, ‘தான் தாயகம் திரும்ப உதவிய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.