கடன் தருவதாக கூறி 2 வாலிபர்களிடம் ரூ.3 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கடன் தருவதாக கூறி 2 வாலிபர்களிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் புதுரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் அங்கமுத்து (வயது 24). கடந்த ஜனவரி மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு தனிநபர் கடன் வழங்குவதாக ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ளது. பின்னர் அந்த நம்பரை அங்கமுத்து தொடர்பு கொண்டு பேசியதோடு, எதிர்முனையில் பேசிய நபர் கூறியதை நம்பி ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 350-ஐ வங்கி கணக்கு மூலம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அங்கமுத்துக்கு தனிநபர் கடன் தொகை எதுவும் வழங்கப்படவில்லை.
சேலம் பெருமாள் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் செல்வ முத்துக்குமார் (23). இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதன்பிறகு அவரை தொடர்பு கொண்டு பேசிய சிலர், தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி அவரது வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளனர். அதை நம்பி செல்வ முத்துக்குமாரும் தனது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 700 எடுக்கப்பட்டதாக தகவல் வந்ததால் செல்வ முத்துக்குமார் அதிர்ச்சி அடைந்தார். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.