கர்நாடகத்தில் முதல்கட்டமாக 205 கோவில்கள் புனரமைப்பு - மந்திரி சசிகலா ஜோலே தகவல்
கர்நாடகத்தில், முதல்கட்டமாக 205 கோவில்கள் புனரமைக்கப்படுவதாக மந்திரி சசிகலா ஜோலே தகவல் தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி:
மந்திரி சசிகலா ஜோலே
மாநில அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு நேற்று வந்தார். அவர், சித்தாரோடா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து மந்திரி சசிகலா ஜோலே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அறநிலையத்துறை சார்பில் மாநிலத்தில் முதல்கட்டமாக 205 கோவில்கள் புனரமைக்கப்படும். இதற்காக ரூ.1,140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுபற்றி வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நிலம் ஆக்கிரமிப்பை தடுக்க...
அதேபோல் சில கோவில்களில் அடிப்படை வசதிகள் இல்லையென பக்தர்கள் புகார்கள் அளித்து வந்தனர். அதன்பேரில் மாநிலத்தில் முதல்கட்டமாக ஏ கிரேடுவில் உள்ள 25 கோவில்கள், பி கிரேடுவில் உள்ள 139 கோவில்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட உள்ளது. தங்குமிடம், கழிவறை, குடிநீர் உள்ளிட்டவை அடங்கும்.
கர்நாடகத்தில் ‘டெம்பிள் டூரிசம்’ என்ற புதிய திட்டத்தை அரசு அமல்படுத்த இருக்கிறது. கோவில் சொத்துக்களை பாதுகாப்பது, நிலம் ஆக்கிரமிப்பதை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.