பண்ணை மேற்பார்வையாளரை காரில் கடத்திய 5 பேர் கும்பல் கைது
பண்ணை மேற்பார்வையாளரை கடத்திய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி
சென்னையை சேர்ந்தவர் தாமஸ் பாக்யராஜ் வில்லியம். தொழிலதிபரான இவருக்கு திருச்சி-கல்லணை சாலையில் சாய்பாபா கோவில் எதிரே சொந்தமாக பண்ணைத் தோட்டம் உள்ளது. இந்த பண்ணை தோட்டத்துக்கு மேற்பார்வையாளராக திருச்சி தில்லைநகர் 7-வது குறுக்குத் தெருவை சேர்ந்த ஜோசப் வல்லவராஜ்(வயது 50) என்பவரை நியமித்து உள்ளார்.
சம்பவத்தன்று பண்ணை தோட்டத்தில் ஒரு பெண்ணுடன் ஜோசப் வல்லவராஜ் தனியே இருந்துள்ளார். அப்போது அந்தப் பெண் தனது நண்பர்களான லால்குடி ஆதிகுடியைச் சேர்ந்த ராஜா(27), வடக்கு காட்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சபரி(28), கொடிக்கால் பகுதியை சேர்ந்த சசிகுமார்(20), சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார்(30), தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த கவின் குமார்(21) ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை தொடர்பு கொண்டு ஜோசப் வல்லவராஜை கடத்தி பணம் கேட்டு மிரட்டினால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.
5 பேர் கைது
அதன்பேரில், அவர்கள் 5 பேரும் பண்ணை வீட்டிற்கு வந்து ஜோசப் வல்லவராஜை மிரட்டியதோடு வாயில் துணியை வைத்து கட்டி அவரை காரில் கடத்தி சென்றனர். அவருடன் பல இடங்களில் சுற்றித்திரிந்த அந்த கும்பல் நேற்று முன்தினம் லால்குடி அருகே வந்தபோது, அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினர்.
அப்போது ஜோசப் வல்லவராஜ் வாயில் துணி கட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் 5 பேர் கும்பலை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் லால்குடி சென்று ஜோசப் வல்லவராஜ் மற்றும் அவரை கடத்தி சென்ற 5 பேர் கும்பலை ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவா்களிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.