‘போக்சோ’வில் கைதாகும் நபர்களுக்கு ஜாமீன் வழங்கும் முன்பு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம் - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
‘போக்சோ’வில் கைதாகும் நபர்களுக்கு ஜாமீன் வழங்கும் முன்பு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பாலியல் பலாத்கார வழக்கு
சிறுமிகள், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நபர்கள் மீது ‘போக்சோ’ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுபோன்று ‘போக்சோ’ சட்டத்தில் கைதாகும் நபர்கள், ஜாமீன் பெற்று எளிதில் சென்று விடுவதாகவும், அதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமிக்கோ, அவர்களது குடும்பத்திற்கோ தெரியவில்லை என்றும், இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கா்நாடக ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளார்.
தகவல் தெரிவிப்பது கட்டாயம்
அதில், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்கள். அந்த நபர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயமாகும். அதற்கு முன்பாக கோர்ட்டில் ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட நபர் மனு தாக்கல் செய்தாலே, அதுபற்றியும் விசாரணை அதிகாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீன் தாக்கல் செய்ததும், உடனடியாக அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை விசாரணை அதிகாரி, சிறுமியின் குடும்பத்தினர், அரசு வக்கீலுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற போக்சோ சட்டத்தில் கைதாகும் நபர்கள், சிறுமியின் உறவினர்களாக இருந்தால், ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முன் குழந்தைகள் நல அமைப்புக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை விதித்து தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தரவிட்டுள்ளார்.