போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து மறியல்

திருச்சியில் தனியார் பஸ் டிரைவரை தாக்கிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து தனியார் பஸ் டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-03-06 20:01 GMT
திருச்சி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை செல்லும் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். மேலும், திருச்சி மாவட்ட தனியார் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சங்க தலைவராகவும் உள்ளார். வழக்கம்போல நேற்று பஸ்சை ஓட்டிச்சென்ற அவர் திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் வந்தபோது முன்சென்ற ஆட்டோவை கடந்து செல்ல முற்பட்டார். அப்போது அவருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சாலை மறியல்
இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்தமுயற்சி தோல்வி அடைந்து சப்-இன்ஸ்பெக்டருக்கும், தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரனை கண்டித்து மெயின்கார்டுகேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது, போலீசாருக்கும்-டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதில், சமாதானம் அடைந்த தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்