பூச்சி மாத்திரை சாப்பிட்ட வேளாண்மை பெண் அலுவலர் சாவு
திருவையாறு அருகே பூச்சி மாத்திரை சாப்பிட்ட வேளாண்மை பெண் அலுவலர் இறந்தார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
திருவையாறு:
திருவையாறு அருகே பூச்சி மாத்திரை சாப்பிட்ட வேளாண்மை பெண் அலுவலர் இறந்தார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
வேளாண் பெண் அலுவலர்
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த மணக்கரம்பை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது35). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மங்களநாயகி (31). இவர் நாச்சியார்கோவிலில் வேளாண்மை அலுவலராக வேலைபார்த்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
பூச்சி மாத்திரை சாப்பிட்டு சாவு
கணவன்-மனைவி இடையே பணம் பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மங்களநாயகி பூச்சி மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மங்களநாயகி இறந்தார்.
ஆர்.டி.ஓ.விசாரணை
இதுகுறித்து மங்களநாயகி தாய் சூரக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி (50) என்பவர் நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மங்களநாயகிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.