மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

மேல் நங்கவரம், மலைக்கோவிலூர், ஆலத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-06 19:43 GMT
நச்சலூர், 
மகாமாரியம்மன் கோவில்
குளித்தலை தாலுகா, மேல் நங்கவரம் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிகள் நடைபெற்றன. பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த கிராமமக்கள் முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் மேளதாளத்துடன் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு முதல் கால பூஜையாக பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது. 2-ம் கால பூஜையாக மங்கள இசை, மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது.
கும்பாபிஷேகம்
இதையடுத்து நேற்று காலை 8.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டு சுற்றியது. இதை பார்த்த பக்தர்கள் ‘ஓம் சக்தி பராசக்தி’ என பக்தி பரவசத்துடன் கூறினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பால், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் விநாயகர் மற்றும் பாலமுருகன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவசக்தி மாரியம்மன்
அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பாரதி நகரில் சிவசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நங்காஞ்சி ஆறு உருவாகும் பழனி பரப்பலாறு அணை பகுதியில் உள்ள தலைக்குத்து என்ற இடத்திற்கு கிராம மக்கள் சென்று அங்கு இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.
இதையடுத்து, சிவாச்சாரியார் ராஜசேகர் தலைமையில் வேத விற்பன்னர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் மலைக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அங்காளம்மன் கோவில்
தோகைமலை ஒன்றியம் ஆலத்தூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு அங்காளம்மன், பாப்பாத்தி அம்மன், பேச்சியம்மன், கருப்பசாமி, வீரபத்திரன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த நிலையில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதையொட்டி மேளதாளம் முழங்க குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனுக்கிரக பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 2-ம் கால பூஜை, ரக்‌ஷாபந்தனம், நாடிசந்தானம், கோ பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. பின்னர் கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் கருடபகவான் சுற்றி வந்தது. 
பின்னர் அனைத்து தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்