ஒரே நேரத்தில் 4 கோவில்களில் குடமுழுக்கு

ஆவணியாபுரம் கிராமத்தில் ஒரே நேரத்தில் 4 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-06 19:33 GMT
திருவிடைமருதூர்:
ஆவணியாபுரம் கிராமத்தில் ஒரே நேரத்தில் 4 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் 
கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரம் கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே சித்தி விநாயகர், மங்காகுளம் மாரியம்மன், மாணிக்க நாச்சியார் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 4-ந்தேதி  முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பி்ன்னர் 5 விமானங்களுக்கும் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. 
குடமுழுக்கு 
காலை 10 மணி அளவில் ஒரே நேரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சித்திவிநாயகர், மாரியம்மன், மாணிக்க நாச்சியார் ஆகிய கோவில்களில் உள்ள 5 விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அபிஷேகம் நடைபெற்றது. இதில்  திருவடிக்குடில் சுவாமிகள், ம.தி.மு.க. மாநில விவசாய பிரிவு செயலாளர் முருகன், ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலர் சரவணன், ஆவணியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நூருல்சித்திக், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர்  ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான  ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் ஏ.ஜி.சீனிவாசன் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்