அன்னவாசல் பேரூராட்சியில் போலீசார் மீது கல்வீச்சு; 200 பேர் மீது வழக்கு

போலீசார் மீது கல்வீச்சு; 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-03-06 18:55 GMT
அன்னவாசல்:
அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியில் இதுவரை காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க., கட்சிகள் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க. தலைவர் பதவியை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பான்மையுடன் இருந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன் கூட்டியே நீதிமன்றத்தை நாடி உரிய போலீஸ் பாதுகாப்பு கேட்டு பெற்றிருந்தனர்‌. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீசார் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கி தேர்தல் நடத்த கடந்த 4-ந்தேதி பேரூராட்சி மன்ற அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது தி.மு.க.வினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஏற்பட்ட பிரச்சினையில் போலீசார் தி.மு.க.வினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர். தி.மு.க.வினர் நடத்திய கல்வீச்சில் பரமேஸ்வரி, நீலா, முகமது அசாருதீன், முகமது ஜாபர் ஷெரிப் ஆகிய 4 போலீசார் காயம் அடைந்தனர். தி.மு.க.வினர் சிலரும் காயம் அடைந்தனர். இந்நிலையில் காயமடைந்த போலீசார் கொடுத்த புகாரின் பேரில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் அன்னவாசல் போலீசார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்