அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா
மேல்வாலை அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா மேல்வாலை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டும் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கத்தி, சூலம், கபாலம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் ஏந்தியவாறு 18 கரங்களுடன் மயானக் காளியாய் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து அதே கிராமத்தில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
அப்போது பக்தர்கள் சிலர், அங்காளம்மன், காளி, காத்தவராயன், பாவாடைராயன், கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு வந்து அங்கு படையலிட்டு தாங்கள் கொண்டு வந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை அம்மன் மீது வீசி கொள்ளையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் மேல்வாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மேல்வாலை கிராம மக்கள் செய்திருந்தனர்.