கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்த கன்றுக்குட்டி

தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு ஒன்று கன்று குட்டி ஒன்றை கடித்து குதறியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2022-03-06 18:30 GMT
தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு ஒன்று கன்று குட்டி ஒன்றை கடித்து குதறியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடித்து குதறிய நிலையில் கன்றுக்குட்டி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள ராதாபுரம் கிராமத்தில் வேளாண்மை அலுவலகம் உள்ளது இந்த அலுவலகத்திற்கு எதிரே குழந்தைவேல் என்பவரது நிலம் உள்ளது. அதில் அவருக்கு சொந்தமான ஆடு மாடுகளை கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார். 

நேற்று முன் தினம் மாலை 6 மணி அளவில் ஆடு மாடுகளை மேய்த்துவிட்டு குழந்தைவேல் கொட்டையை திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கு கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டி ஒன்று உடல் முழுவதும் கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது.

அதிர்ச்சி அடைந்த குழந்தைவேல் அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த ஜெயராபிவி என்பவர் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் மர்ம விலங்கு ஒன்று சென்றதாக கூறியுள்ளார். எனவே அந்த விலங்கு கன்றுக்குட்டியை கடித்து குதறியிருக்கலாம் என தெரிகிறது. இந்த தகவல் பொதுமக்களிடையே பரவத்தொடங்கியது.

கால் தடம்

இந்த நிலையில் தகவல் அறிந்த தாசில்தார் பரிமளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பத், ஆனந்தன், முத்து மற்றும் வனவர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கரும்பு தோட்டத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு இடத்தில் மட்டும் அந்த விலங்கின் கால்தடம் ஒன்று இருந்தது தெரிய வந்தது. அது சிறுத்தைப்புலியின் கால்தடத்தைபோல் இருந்தது. 

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் வனத்துறையினர் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

ஆனால் தகவல் ஒன்றும் புலப்படவில்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பொதுமக்கள் பீதி

இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் பரவியதை தொடர்ந்து பொது மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் கிராம மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். மேலும் நேற்று யாரும் வயல்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். 

மேலும் செய்திகள்