ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு போட்டி

Update: 2022-03-06 17:46 GMT
சிவகங்கை, 
சிவகங்கை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு 
சிவகங்கை அருகே உள்ளது டி.புதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 216 காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அழைத்து வரப்பட்டன. 
இந்த காளைகளை பிடிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக புதூர் கோவில் காளை வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் கிராம கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக களத்தில் அவிழ்த்து விடப்பட்டது. 
மைதானத்தில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் கிராமத்தினர் சார்பில் சில்வர் பாத்திரம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டது. 
80 பேர் காயம் 
மேலும் போட்டியின்போது காளைகள் முட்டியதில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த ஒக்கூரை அடுத்த கருங்காபட்டியை சேர்ந்த ரஞ்சித்(வயது 25), காரைக்குடி சங்கராபுரத்தை சேர்ந்த சின்னக்கருப்பன் (18), திருப்பத்தூரை அடுத்த பூலாங்குறிச்சியை சேர்ந்த அடைக்கப்பன் (21),  திருப்புவனத்தை சேர்ந்த விஜய் (26), பேச்சாத்தங்குடியை சேர்ந்த அன்பரசன் (23), சிவகங்கையை சேர்ந்த மாரிமுத்து (18) ஆகிய 6 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியை காண சிவகங்கை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்