தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது வழக்கு
தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். பறிமுதல் செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன்கள் சுரேஷ் (வயது 32), பாஸ்கரன்(28), சின்னதுரை (23). இவர்கள் 3 பேரும் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் விவசாய பணிக்காக செஞ்சியில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கடன் பெற்று 2 டிராக்டர்களை சுரேஷ் வாங்கினார். அந்த டிராக்டர்களை அண்ணன்-தம்பிகள் 3 பேரும் பயன்படுத்தி கடனை அடைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடன் தொகையை முறையாக கட்டவில்லை என கூறி ஒரு டிராக்டரை நேற்று முன்தினம் நிதிநிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த சின்னதுரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நிதிநிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் லிங்கேஷ்வரன், சிவா உள்பட 4 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.