சங்கராபுரம் அருகே வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
சங்கராபுரம் அருகே வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
மூங்கில்துறைப்பட்டு
சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு மற்றும் பொய்குணம் கிராமங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கசிவுநீர் குட்டை அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். தொடர்ந்து சோழம்பட்டு தெருக்களில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவைகளை பார்வையிட்ட அவர் பணியின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் பொய்குணம் முதல் ஜவுளிகுப்பம் வரை பிரதம மந்திரியின் சாலை வசதி திட்டத்தின் கீழ் போடப்பட்ட தார் சாலையை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கிராமப்புறப் பகுதிகளில் அரசு திட்டங்கள் மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படுகிறதா? என்றும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி திட்ட இயக்குனர் சார்லஸ்கென்னடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர்கள் ராஜகோபால், சபாகான், பணி மேற்பார்வையாளர் இளங்கோவன், சோழம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசித்ராடேவிட், பொய்குணம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் கொளஞ்சி வேலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.