லாரி-கார் நேருக்கு நேர் மோதல் விவசாயி பலி 4 பேர் படுகாயம்

வீரபாண்டி அருகே லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் காரை ஓட்டி வந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-06 15:52 GMT

உப்புக்கோட்டை:
தேனி அருகே உள்ள சமதர்மபுரம் வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் ராதேஷியாம்(வயது39). விவசாயி. இவர் நேற்று மாலை தனது நண்பர்களான கோட்டைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வேல்ராஜன் (30), தேனி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பாண்டித்துரை (32), சக்தி செல்வா (29), அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்த அய்யப்பன் (25) ஆகியோருடன் காரில் சென்றார். காரை ராதேஷியாம் ஓட்டினார். 
 நிலக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (47). இவர் லாரியில் வாழைக்காய்களை ஏற்றிக்கொண்டு சின்னமனூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தார். 
இந்தநிலையில் தேனி- கம்பம் சாலையில் வீரபாண்டி புதுப்பாலம் அருகே லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 
சாவு
இந்த விபத்தில் ராதேஷியாம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராதேஷியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
விபத்து தொடர்பாக லாரி டிரைவர் சத்தியமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்