தொழிலாளியை போலீசார் தாக்கியதாக புகார்
திருச்செந்தூரில் தொழிலாளியை தாக்கியதாக போலீசார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
துாத்துக்குடி:
மெஞ்ஞானபுரம் வலசை கிணறு பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி பாண்டி. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று உடல் உபாதைகளுடன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் போலீஸ் தாக்கியதால் இசக்கிப்பாண்டி பாதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோதரர் சுப்பையா கூறும் போது, கடந்த 2 நாட்களுக்கு முன் எனது சகோதரர் இசக்கி பாண்டியை திருச்செந்துார் போலீசார் புகையிலை பொருட்கள் தொடர்பான விசாரணைக்காக அழைத்து சென்றனர். நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது இசக்கி பாண்டியை பார்க்க முடியவில்லை. நேற்று திடீரென இசக்கி பாண்டியை அழைத்து செல்லுமாறு கூறினர். அங்கு சென்ற போது, அவர் நடக்க முடியாத நிலையில் இருந்ததால், நாங்கள் அழைத்து செல்ல மறுத்தோம். இசக்கி பாண்டியிடம் கேட்டபோது விசாரணை செய்யும் போது வயிற்றில் தாக்கியதாகவும், சிறுநீர் கழிக்க முடியவில்லை என கூறினார். பின்னர் இசக்கி பாண்டியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்து உள்ளனர். ஆகையால் இசக்கிபாண்டியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.