அனல்மின்நிலைய ஊழியர் வீட்டில் ரூ.4.லட்சம் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் அனல்மின்நிலைய ஊழியர் வீட்டில் ரூ. 4 லடசம் நகைகள் திருடப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி கேம்ப்-2 பகுதியை சேர்ந்தவர் சிவஞானபாண்டியன். இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனுராதா (வயது 30). கடந்த 1-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்களாம். நேற்று முன்தினம் மீண்டும் வந்த போது, வீட்டின் முன்பக்க தகவு உடைக்கப்பட்டு கிடந்தது.
அதே போன்று வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்கநகைகளை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது இது குறித்து அனுராதா, தெர்மல்நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது