சென்னை நீர்நிலைகளில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் 61 கிலோ மீட்டர் தூரம் கொசு மருந்து தெளிப்பு

சென்னை நீர் நிலைகளில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் 61 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொசு மருந்து தெளிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

Update: 2022-03-06 09:44 GMT
கொசு ஒழிப்பு பணி

பெருநகர சென்னை மாநகராட்சியில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் 3,463 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிக்காக 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள், 251 கையினால் கொண்டு செல்லும் புகைப்பரப்பும் எந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகைப்பரப்பும் எந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் சென்னையில் உள்ள நீர் நிலைகளில் கொசு புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், 371 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

61 கிலோ மீட்டர் தூரம்

இந்த நிலையில் சென்னையில் உள்ள நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் போது ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு வான்வழி வாகன கழகத்துடன் இணைந்து சோதனை முறையில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் நீர்நிலைகளில் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டன. சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகளவு கொசுக்கள் இருப்பதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீண்டும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி முதல் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சென்னையில் உள்ள நீர்வழி கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது. கடந்த 5 நாட்களில் 61 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொசுப்புழு கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் வீராங்கால் ஓடையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், மாநகராட்சி கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்